
Al-Arabiya (24.06.2016)
வடமேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய நாடான முரித்தானியாவில் ஈரானிய ஷீஆ அலை அதிகரித்துவருவதன் காரணமாக அதனைக் கட்டுப்படுத்த ஈரானுடனான சகல உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசில் அங்கம் வகிக்கும் முரித்தானியன் கட்சியானது அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அதேவேளை அரபு நாட்டு தலைவர்கள் அனைவரும் ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ளவேண்டுமென கோரி முரித்தானிய தலைநகரில் இடம்பெற இருக்கும் அரப் லீக் மாநாட்டுடன் இணைந்ததாக கோஷங்களை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும் அந்த கட்சி உறுதிசெய்துள்ளது.
முரித்தானிய அரசாங்கம் ஈரானுடனான உறவுகளை துண்டித்துக் கொள்ளவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் அதிகரித்துவரும் ஈரானிய ஷீஆக்களின் தலையீடுகள் காலப்போக்கில் நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் அபாயமாகவும் மாறிவிடும் என அக்கட்சியின் தலைமையகத்தினால் அரசாங்கத்திற்கு எச்சரிக்கைவிடுத்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் கஷ்டநிலையிலுள்ள சமூக குழுக்களை மேம்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் ஈரான் சில முகவர்களுக்கு நிபந்தனையுடனான உதவிகளை வழங்கி வருகின்றது, இதன் மூலம் நாட்டில் பல நூறு வருடங்களாக பின்பற்றப்பட்டுவரும் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கைகள் மற்றும் விழுமியங்களை சீர்குலைப்பதற்காக சில குழுக்களை வைத்து ஈரான் கருத்து முரண்பாடு மற்றும் வேற்றுமையின் விதைகளை தூவி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரானிய அதிகாரிகளால் பஹ்ரைனுக்கு விடுக்கப்பட்ட அச்சறுத்தல் மற்றும் கோபமூட்டும் செயற்பாடுகளை முரித்தானிய அரசாங்கம் கண்டனம் செய்திருந்ததுடன் இது சர்வதேச நாடுகளின் விழுமியங்களுக்கு எதிரான செயற்பாடு எனவும் தெரிவித்திருந்தது. அத்துடன் சர்வதேச நாடுகளின் விழுமியங்கள், நடைமுறைகளை குழப்பும் இப்படியான செயற்பாடுகளை ஈரான் நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.