
ekhbariya.net (29.05.2016)
சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையில், ஹஜ் விவகார ஒழுங்கமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வந்த ஈரானியர்கள் ஹஜ் அமைப்பின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் தமக்கான இலாபங்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இவ்வருடத்திற்கான ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து திரும்பி சென்றுள்ளனர், இது ஏற்றுக் கொள்ளமுடியாத செயற்பாடு என தெரிவித்தார்.
ஈரானியர்கள் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திரும்பி வந்தார்கள், அவர்கள் ஈரானியர்களுக்கான விசாக்களை இணையம் ஊடாக வழங்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர், அது எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் ஈரானிய யாத்திரிகர்களை அவர்களின் தேசிய போக்குவரத்து மூலம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர், அதற்கான பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு கோரினர், அதற்கும் சஊதி உடன்பட்டது. யாத்திரிகர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை செய்துகொடுப்பதற்கும், அவர்கள் ஹஜ் வணக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சஊதி அரேபியா எந்தளவு ஆர்வத்துடன் செயற்படுகிறது என்பதற்கும் இந்த ஆதாரங்களே போதுமானது.
ஈரான் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளுக்கும் சஊதி அரேபியா இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் ஈற்றில் அவர்கள் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் திரும்பிச் சென்று விட்டனர் என அவர் தெரவித்தார்.
ஈரான் நாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதை தடுப்பதே ஈரானின் பிரதான இலக்கு என அல்ஜுபைர் சுட்டிக் காட்டினார். இது மிகவும் மோசமான செயற்பாடாகும். ஹஜ் மற்றும் உம்றா யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விசேட ஏற்பாடுகளை சஊதி அரேபியா மேற்கொண்டுள்ளது. அத்துடன் சஊதி அரேபியா யாரையும் ஹஜ், உம்றா கடமைகளை செய்வதை தடுக்கவில்லை என தெரிவித்த அவர், சஊதி அரேபியா ஹஜ் விவகாரம் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஹஜ் ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மேற்கொள்ள ஆலோசனை நடாத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.